காலை நேரத்தை உதிக்கச் செய்யும் நாயகனே! இரவை அமைதியாக்கும் ரஹ்மானே! சூரியனையும், சந்திரனையும் காலக் கணக்கிற்கு ஏற்பச் சுழலச் செய்பவனே! ஆதியும், அந்தமும் இல்லாத ஏக இறைவனே! உன்னைப் போற்றிப் புகழ்கிறோம்! எங்களைப் படைத்த ரப்பே! உனக்கே புகழனைத்தும்! உன்னையே வணங்குகிறோம். உன்னையே சரணடைந்தோம். உன்னிடமே உதவியையும் கேட்கிறோம்.
கருணையாளனே! நேற்றைய நாளை விட இன்றைய நாளைச் சிறப்பாக்குவாயாக! இன்றைய நாளில் எங்கள் காரியங்களை இலேசாக்குவாயாக! உன்னிடம் இருந்தோ அல்லது பிறரிடம் இருந்தோ வருபவை எவையானாலும், அவை உன் அருளால் மட்டுமே கிடைக்கின்றன என நாங்கள் நம்புகிறோம். எங்கள் தேவை அறிந்து உதவிடுவாயாக! உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம். எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் இல்லங்களில் உன் அருளை விரிவாக்குவாயாக! எங்களின் ரிஜ்குகளில் பரக்கத் செய்வாயாக! எங்களின் நிலைமைகளை மிக அழகான, மன அமைதி தரும் நிலைமைக்கு மாற்றுவாயாக! எங்களின் நோய்களைக் குணப்படுத்துவாயாக! எங்களின் கடன்களை நிறைவேற்றுவாயாக! எங்களின் ஈமானை வலுப்படுத்துவாயாக. துன்பங்களை எதிர் கொள்ளும் ஆற்றலைத் தருவாயாக!
("என்) இறைவனே! தொழுகையை நிலை நிறுத்துவோராக என்னையும், என் சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என் பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!" (அல்குர்ஆன் : 14:40)
"எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து, எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! (அல்குர்ஆன் : 25:74)
"இவ்வுலகிலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்" (அல்குர்ஆன் : 7:156)
அனைத்து உலகிற்கும் அதிபதியே! உன்னிடமிருந்து எங்களின் எல்லா நோய்களும் நீங்கிடும் ஷிபாவைத் தருவாயாக! எங்களுக்கு நலன் தருபவற்றைப் பெறுகின்ற ஆற்றலைத் தருவாயாக! உன் அருளை விரிவாக்குவாயாக! துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் மன வலிமையைத் தருவாயாக. நீ அருள்வதைக் கொண்டு திருப்தி கொள்ளும் உள்ளத்தைத் தருவாயாக! உன் படைப்புகளுடன், பெருந்தன்மையுடன் பழகும் வகையில் எங்கள் உள்ளத்தை விரிவாக்குவாயாக.
காலம் கடக்கு முன் பாவமன்னிப்பின் பால் விரையும் மனோபாவத்தைத் தருவாயாக! நாங்கள் வாழ்கின்ற காலத்திலும், எங்கள் மரணத்திலும், எங்கள் அந்தரங்கங்களை அழகாக ஆக்குவாயாக! மரணத்திற்குப் பின் எங்கள் கப்ரை விசாலமாக ஆக்குவாயாக!
'இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன், நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக!""பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!"
எங்களின் பாதுகாவலனே! எங்களிடம் உள்ள தீயவற்றின் காரணமாக, உன்னிடம் உள்ள நன்மைகளைத் தடுத்து விடாதே! எங்களின் நன்றிக் குறைவின் காரணமாக, உன்னிடம் உள்ள அபரிதமான நலன்களைத் தடுத்து விடாதே! எங்களின் பாவ மன்னிப்புக் குறைவின் காரணமாக, கேள்விக் கணக்குக் கேட்கும் நாளில் எங்களைத் தண்டித்து விடாதே! எங்களின் பொறுமைக் குறைவின் காரணமாக, எங்களுக்கு எந்த இழப்பையும் செய்து விடாதே! நீ சங்கைக்குரியவன்! உன் கருணை அனைத்துப் பொருட்களின் மீதும் பரவி இருக்கிறது!
காரணங்களுக்கெல்லாம் காரணமானவனே! அனைத்து வாசல்களையும் திறப்பவனே! சப்தங்களைக் கேட்பவனே! அழைப்பவர்களுக்குப் பதிலளிப்பவனே! தேவைகளை நிறைவேற்றுபவனே! நீ அளிக்கும் ஹலாலானவற்றைக் கொண்டு, ஹராமானவற்றிலிருந்து எங்களுக்குப் போதுமாக்குவாயாக! உன் மேலருளால், உன்னை அல்லாத பிறரை விட்டும், எங்களைத் தேவையற்றவவர்களாக ஆக்குவாயாக! உன் நிஃமத்களை எங்களுக்கு நிரந்தரமாக்குவாயாக! எங்கள் மீது எவற்றை விதித்துள்ளாயோ, அவற்றில் உன் மேலதிகக் கருணையைக் காட்டுவாயாக!
நோய்களைக் குணப்படுத்துபவனே! உன் ஷிபா அன்றி வேறெந்த மருந்தும் பலனளிக்காது. உன்னை நின்று வணங்க இயலாத அளவு எங்களின் உடலில், உன் சோதனையை ஏற்படுத்தி விடாதே!
யா அல்லாஹ்! எங்கள் உள்ளத்தை உன்னிடம் ஒப்படைக்கிறோம். உறுதியான, அதன் பின் குப்ரு ஏற்படாத ஈமானை எங்களுக்கு அருள்வாயாக! இவ்வுலகிலும், மறுமையிலும் உன் சங்கையான அற்புதங்களை அடையும் ரஹ்மத்தை அருள்வாயாக!
யா அல்லாஹ்! விதியில் வெற்றியைக் கேட்கிறோம். ஷுஹதாக்களுக்கான இடத்தைக் கேட்கிறோம். ஷுஹதாக்களின் வாழ்க்கையைக் கேட்கிறோம். எங்களின் எதிரிகளுக்கு எதிரான உதவியைக் கேட்கிறோம்.
யா அல்லாஹ்! எங்களைப் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கண்ணியப்படுத்துவாயாக! எங்களை வழி கேட்டில் இழுத்துச் செல்லாத செல்வத்தைக் கொடுப்பாயாக! பலனுள்ள கல்வியைக் கொடுப்பாயாக. பொறுமையான உள்ளத்தைக் கொடுப்பாயாக. கடனில்லா வாழ்வைக் கொடுப்பாயாக. எங்கள் ஆலிம் பெருமக்களுக்கும், செல்வர்களுக்கும் சமுதாயச் சிந்தனையைக் கொடுப்பாயாக. எங்கள் அரசியல் தலைவர்களுக்குத் தூய எண்ணத்தைக் கொடுப்பாயாக. எங்கள் இளைஞர்களுக்கு மார்க்கப் பற்றைக் கொடுப்பாயாக. எங்கள் பெண்களுக்கு இம்மை, மறுமைக்கான நல்லறிவைக் கொடுப்பாயாக. எங்கள் குழந்தைகள் இம்மையிலும், மறுமையிலும் சிறந்து விளங்க, நல்ல கல்வி ஞானத்தைக் கொடுப்பாயாக. எங்கள் அனைவருக்கும் உன்னை மட்டுமே வணங்கி, உன்னிடம் மட்டுமே உதவி கேட்கும் ஈமானைக் கொடுப்பாயாக!
யா அல்லாஹ்! உன்னிடம் எங்களின் தேவைகளை முன் வைக்கிறோம். எங்களின் சிந்தனை, குறைவாக இருந்தாலும், எங்களின் அமல்கள் குறைவாக இருந்தாலும், உன் கருணையின் பால் தேவை உடையவர்களாக இருக்கிறோம். எங்கள் உள்ளங்களில் அமைதியை ஏற்படுத்துவாயாக! எங்கள் நோய்களைக் குணப்படுத்துவாயாக! எங்கள் நிலைமைகளைச் சீர்படுத்துவாயாக! என்றும் உன்னை வணங்கி, உன்னிடமே உதவி கேட்கும் நல்லடியார்களாக எங்களை வாழ வைப்பாயாக!
"ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" (அல்குர்ஆன் 2:201)
"பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸ்தாரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!"
''இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்கு உள்ளாக்காது இருப்பாயாக!"
''அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா."
''எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ, அவர் (கண்ணியம் அடைவார்)." (அல்குர்ஆன் 26: 83-89)
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். வல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்
*ஆமீன்*